நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா துவக்கம்

நாமக்கல்லில் 78 நாட்கள் நடைபெறும் அருள்மிகு பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா துவங்கியது.

Update: 2022-05-08 13:30 GMT

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல்,  மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற அருள்மிகு பலபட்டறை மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்த கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று  காலை பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் மோகனூர் சென்று காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடங்கள் எடுத்துக்கொண்டு, நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து, சக்தி அழைப்பு மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை 9ஆம் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதலும், 15ஆம் தேதி மறுகாப்பு, 22ஆம் தேதி வடிசோறு, மாவிளக்கு நிகழ்ச்சியும், 23ஆம் தேதி அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், சுவாமி தேரோட்டம், அலகு குத்துதல், அக்கினி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு மாவிளக்கு பூஜையும் நடைபெறும்.

வரும் 24ஆம் தேதி மாவிளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், 25ஆம் தேதி மஞ்சள் நீர் உற்சவம். 26ஆம் தேதி கம்பம் பிடுங்குதல் மற்றும் விடையாற்றி உற்சவம் நடைபெறும். மேலும் திருவிழா நிகழ்ச்சியாக ஜூலை 24ஆம் தேதி வரை தினசரி இரவு 7 மணிக்கு கட்டளைதாரர்கள் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். மொத்தம் 78 நாட்கள் விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பழனிவேலு, உதவி கமிஷனர் ஆணையர் ரமேஷ், கோயில் பணியாளர்கள் மற்றம் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News