தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்டு.. எஸ்.பி. அதிரடி உத்தரவு...

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Update: 2023-01-31 06:54 GMT

தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல், செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம்.

நாமக்கல் அடுத்துள்ள பொம்மைக்குட்டை மேட்டில் கடந்த 28 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பங்கேற்றார்.

விழாவுக்காக, பொம்மைகுட்டை மேட்டில் பிரம்மாண்டமான முறையில் மேடை அமைத்து, அதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார்.

மாவட்ட ஆட்சியர், அரசுத் துறை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் தேசீய கீதம் பாடப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

ஆனால், தேசியக் கீதம் ஒலிப்பதைக் கூட அறியாமல் விழா மேடையின் மிக அருகே இருக்கையில் அமர்ந்தபடியே நாமக்கல் ஆயுதப்படையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். தேசிய கீதம் ஒலிப்பதைக் கூட அறியாமல் மெய்மறந்து உதவி ஆய்வாளர் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோ குறித்து நாமகல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்போனில் மெய்மறந்து பேசியது உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் என தெரியவந்தது. இதனையடுத்து தேசிய கீதத்தை மதிக்காமல் சேரில் அமர்ந்தபடி செல்போன் பேசிக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை சஸ்பெண்டு செய்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தற்போது உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News