குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு

ப.வேலூர் அருகே குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது

Update: 2024-04-29 08:00 GMT

பரமத்திவேலூர் அருகே குப்பைக்கு தீ வைத்ததால் ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தை, தீயணைப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினார்கள்.

பரமத்திவேலூர் அருகே பேரூராட்சி பணியாளர்கள் குப்பையில் தீ வைத்ததால், தீ பரவி நெடுஞ்சாலையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்'

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர்பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கும் குப்பைக் கழிவுகளை அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் கொட்டி அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுவதில்லை.

அதற்குப்பதிலாக, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை 4 வழிப் பாதையின் ஓரத்தில் குப்பைகளை கொட்டி, நாள்தோறும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குப்பைக்கு தீவைத்து எரிப்பதை பேரூராட்சி பணியாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதேபோல் கடந்த 2 நாட்களாக சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை, கரூர் - நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மலைபோல் குவித்து, பணியாளர்கள் இன்று அதிகாலை குப்பைக்கு தீ வைத்தனர்.

குப்பையில் பற்றிய தீ மளமளவென எரிந்து வானுயர புகை மூட்டத்துடன் பரவியது. நெடுஞ்சாலையில் புகை மூட்டம் பரவியதால், வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதி அடைந்தனர். எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஏற்பட்ட புகை மூட்டத்தால், கார், லாரி, பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில்  சென்றவர்களும் வாகனங்களை ஓட்ட முடியாமல் ஆங்காங்கு நிறுத்தி வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீ மளமளவென பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் பேரூராட்சி பணியாளர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த வேலாயுதம்பாலையம் தீயணைப்பு துறையினர் சாலையோரத்தில் மிகுந்த புகை மூட்டத்தை ஏற்படுத்திய தீயினை போராடி  அணைத்து கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் புகையால் மாசு ஏற்பட்டு சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதாக அவ்வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பேரூராட்சி குப்பை கழிவுகளை, சுகாதார முறைப்பட்டி அதற்கான கம்போஸ்ட் உரக்கிடங்கில் கொட்டாமல், நெடுஞ்சாலைகளில் கொட்டுவதை அதிகாரிகள் கவனித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News