மோகனூர் - நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற கலெக்டரிடம் கோரிக்கை

மோகனூர -நெரூர் காவிரி தடுப்பணை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடாமல் நிறைவேற்ற கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-05-09 09:30 GMT

மோகனூர்-நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தினர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர்.

இது குறித்து விவசாயிகள் முன்னேற்றக்கழக பொது செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில், அதன் நிர்வாகிகள் நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கரூர் மாவட்டம் நெரூர் வரை காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை கைவிடுவதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே 1ம் தேதி கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொண்ட, மின்னசாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் 19 தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மோகனூர் - நெரூர் தடுப்பணை ரூ.700 மதிப்பீட்டில் கட்டப்படும் என தெரிவித்தார்.

கதவணை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ள நிலையில், கதவணை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளது, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 3 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மோகனூர் - நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை கைவிடாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News