ஜேடர்பாளையம் அணை பாசன வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஜேடர்பாளையம் தடுப்பணையில், ராஜா வாய்க்காலில் குளித்த தனியார் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2023-06-06 07:45 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன், இவரது மகன் சிரஞ்சீவி (20). இவர் நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும், ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர் வாசுதேவன் என்பவரும், சிரஞ்சீவியும் நண்பர்கள். இதனால் சிரஞ்சீவி, சக கல்லூரி மாணவர் வாசுதேவன் வீட்டில் தங்கி, இருவரும் கடந்த 6 மாதமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் சிரஞ்சீவி சம்பவத்தன்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். சிரஞ்சீவி தனது நண்பர்களுடன் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சீரஞ்சீவி சென்று குளித்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். அவரை தண்ணீரில் இருந்து மீட்க முடியவில்லை.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் ராஜாவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர் சிரஞ்சீவியின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News