கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 விலை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-03 10:00 GMT

மோகனூரில் நடைபெற்ற விவசாய முன்னேற்ற கழகத்தின், மாநில பொதுக்குழு கூட்டதில், அதன் நிறுவன தலைவர் செல்ல ராஜாமணி பேசினார்.

விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், மோகனூரில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். நிறுவன தலைவர் செல்ல ராசாமணி கோரிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, விவசாய வேலைக்கு பயன்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், அனைத்து பகுதிகளிலும், நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முறையாக நெல் கொள்முதல் செய்ய, சுழற்சி முறையில், 10 பேர் கொண்ட விவசாய கண்காணிப்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்னை விவசாயிகளை பாதுகாக்கவும், தென்னை மரத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து தென்னை மரங்களை காத்திடவும், தமிழகம் முழுவதும் தென்னை, பனை மரங்களில் இருந்து, கள் இறக்க மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், தரமற்ற உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அவற்றை தவிர்க்க, கார்டுதாரர்களின் வங்கி கணக்கில், அத்தியாவசியப் பொருட்களுக்கு உரிய தொகையை ஒவ்வொரு மாதமும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் பயிரிடும் கரும்புக்கு, டன் ஒன்றுக்கு, மத்திய அரசு ரூ.5,000 வழங்க, மாநில அரசு அழுத்தம் கொடுப்பதுடன், கரும்புக்கான வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும், உரிய முறையில் மருத்து வசதி கிடைத்திட, ஒவ்வொரு பஞ்சாயத்து பகுதிகளிலும், நடமாடும் மருத்துவமனை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த திரளான விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News