நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-04-30 10:37 GMT

நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிக்கு வராத குழந்தைகளை, மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் உமா பேசினார்.

பள்ளிக்கு வராமல் இடைநின்ற மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, ஆலோசனைகளை வழங்கி, மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரவழைக்கும் பணியை, சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என, நாமக்கல் கலெக்டர் உமா கூறினார்.

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், 2023-24ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பள்ளி செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

நாமக்கல் கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ், இதுவரை, 126 மாணவ, மாணவியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 45 மாணவ, மாணவியர் விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வரவில்லை. மேற்படி விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கவுன்சிலர்கள் மூலம், அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆலோசனைகள் வழங்கி பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வட்டார கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுனர்களின் மூலம் பள்ளி செல்லாத குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கான பணி முன்னேற்ற அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. அதனால், அனைத்து அலுவலர்களும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ஆலோசனைகளை வழங்கி, குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க அனைத்து பணிகளையும் தொய்வின்றி சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News