ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இடமாற்றம்
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக சிவகிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை, சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையாளராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். சிவகிருஷ்ணமூர்த்திக்கு மாற்றாக ஈரோடு மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மை துறையின் செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சரவண வேல் ராஜ். புவியியல் மற்றும் சுரங்கங்கள் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். சர்க்கரை துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர்- மேலாண்மை இயக்குனர் விஜய ராஜ்குமார் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
சர்க்கரை துறை கூடுதல் ஆணையாளர் அன்பழகன், சர்க்கரை துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் செயல்படுவார். ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியும், முன்னாள் தூதுவருமான பிரஜேந்திர நவ்னீத், விடுமுறையில் இருந்து திரும்பியதும். வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், 16-வது நிதிக்குழுவின் சிறப்பு பணி அதிகாரியாகவும் செயல்படுவார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக (பணிகள்) நியமிக்கப்பட்டு உள்ளார். புவியியல் மற்றும் சுரங்கங்கள் ஆணையர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக மாற்றப்பட்டு உள்ளார். அவர் நிதித்துறையின் சிறப்பு செயலாளராகவும் பணியாற்றுவார். இவர்கள் உள்பட பலர் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.