அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் முகாமிட்டு காட்டு யானை அட்டகாசம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் வனப்பகுதியில் அங்கப்பன் என்பவரை காட்டு யானை ஒன்று மிதித்து கொன்றது. தற்போது, இந்த காட்டு யானை மாத்தூர் அருகே உள்ள மோத்தங்கல்புதூர் வனப்பகுதியையொட்டி விவசாய தோட்டங்கள் உள்ள பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முகாமிட்டு உள்ளது.
இரவு முழுவதும் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள வாழை, கரும்பு, எலுமிச்சையை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதை கண்டதும் விவசாயிகள் விரட்ட முயன்றால், அவர் களை காட்டு யானை துரத்துகிறது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
மேலும், மோத்தங்கல்புதூர் கிராமத்துக்குள்ளும் காட்டு யானை புகுந்து பொதுமக்களை அச்சமூட்டுகிறது. இதனால், தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.