பவானியில் 1.35 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஒருவர் கைது
ஆம்னி வேனில், அரசு வழங்கும் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்;
பவானியில் 1.35 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, அரசு வழங்கும் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்திச் சென்ற ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார், பவானி அருகே லட்சுமி நகரில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதன்போது, ஒரு ஆம்னி வேனில், தலா 50 கிலோ எடையில் 27 மூட்டைகளில், மொத்தம் 1.35 டன் (1,350 கிலோ) ரேஷன் அரிசி கடத்தி வருவதைக் கண்டுபிடித்தனர்.
தீவிர விசாரணையில், வேனை ஓட்டிவந்தவர் பவானி குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அப்புசாமி (வயது 49) என்பதும், அவர் மக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, அதை வடமாநில தொழிலாளர்களிடம் மற்றும் கால்நடை தீவன கலப்பிற்காக விற்பனை செய்ய கடத்திச் சென்றதும் தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே அவரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசியுடன் வேனையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் நலத்துக்காக இலவசமாக வழங்கப்படும் அரிசியை, சட்டவிரோதமாக வியாபார மாக மாற்றும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், இதுபோன்ற சோதனைகள் அரசு நல திட்டங்களை பாதுகாக்கும் முக்கியமான முயற்சியாக திகழ்கின்றன.