கவுந்தப்பாடி அருகே தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே நடந்து சென்ற தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;
கவுந்தப்பாடி அருகே நடந்து சென்ற தொழிலாளியை வழிமறித்து பணம் பறித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூர் மந்தக்காட்டூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது 62). கூலித்தொழிலாளியான இவர் வேலைக்கு சென்றுவிட்டு கவுந்தப்பாடி உப்புக்காரபள்ளம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த இளைஞர்கள் 3 பேர் நஞ்சப்பனிடம், செல்போன் ஒன்றை காணவில்லை. அதை நீங்கள் தான் எடுத்து வைத்திருக்கிறீர்களா? என கூறி பரிசோதிப்பது போல் பரிசோதித்து அவரிடம் இருந்த ரூ.500-யை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றனர்.
இதனால் அவர் "திருடன், திருடன்" என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று 3 பேரையும் துரத்தி சென்று பிடித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் சித்தோடு சந்தைக்கடை மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (21), தனுஷ் (19), மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்த சிவசங்கர் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஸ்கூட்டர் பறிமுதல் செய்தனர்.