பவானி அருகே பாரில் பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் 2 பேர் கைது!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பாரில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சரவணன், சாதிக் பாட்ஷா.
பவானி அருகே பாரில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய த.வா.க., நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 49). இவர் பவானி லட்சுமிநகர் பகுதியில் ஓட்டல் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார் (மதுக்கூடம்) நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் சித்தோடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 7ம் தேதி பாருக்கு போன் செய்த ஒருவர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவை சேர்ந்த சாதிக் பாஷா (வயது 39) என கூறினார்.
நாற்காலி பத்திரிக்கை திண்டுக்கல் மாவட்ட நிருபர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மடத்துக்குளம் சட்டமன்ற பொறுப்பாளராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாரில் அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்து வருவது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினார்.
மேலும், தாராபுரம் அருகே உள்ள புஞ்சைதலையூர் கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 37) திருப்பூர் கிழக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயலாளராக உள்ளார். அவரிடம் பணத்தை கொடுத்துவிடுமாறு கூறினார்.
பின்னர், மாலை நேரத்தில் மீண்டும் வாட்ஸ்அப் அழைப்பில் வந்து பணம் கேட்டு மிரட்டினார் என்று அந்த புகாரில் அவர் கூறி இருந்தார். அதன்பேரில் பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு ரத்தினகுமார் ஆலோசனையின் பேரில் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் தெரிவித்த முகவரிக்கு சென்ற போலீசார், சாதிக்பாட்ஷா, சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோபு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.