கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 14) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
கோபி பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல்திறன் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 14) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒத்தக்குதிரை, பொம்மநாயக்கன்பாளையம், பொலவகாளிபாளையம் ஊராட்சிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு. ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டு, திட்டங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் பிரிவு. ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் பொறியியல் பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பொம்மநாயக்கன்பாளையம் ஏடி காலனியில் ஊரக குடியிருப்புகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 12 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையொட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறித்த காலத்தில் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வீடுகளுக்கும் முறையாக கழிப்பிட வசதி உள்ளதா என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து, பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1.86 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவியர்கள் கழிவறை சீரமைக்கப்பட்டதை பார்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாணவர்களின் ஆங்கில கற்றல் திறன், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களின் தற்போதைய கற்றல் திறன் ஆகியவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து, பொலவகாளிபாளையம் ஊராட்சியில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் திரு.திருமூர்த்தி என்பவர் ரூ.1.51 லட்சம் மதிப்பீட்டில் ரூ.47 ஆயிரம் மானியத்தில் ரோட்டோவேட்டர் பெற்றுள்ளதை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பொலவகாளிபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வருகை, தேர்ச்சி விகிதத்தினை கேட்டறிந்து, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
மேலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.9.96 கோடி மதிப்பீட்டில் 4 எம்.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 20 கே.எல்.டி கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன் திட்டத்தின்" கீழ் பாலிடெக்னிக் மற்றும் தொழில்துறை பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சிஎன்சி மெஷினிங் திறன் பயிற்சி வழங்கும் பெருந்துறையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தை பார்வையிட்டு, அங்கு சிஎன்சி இயந்திரம் மூலம் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பயிற்சி பெறும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த, மாணவ, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி. பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரவீன் குமார், சக்திவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.