தசைகளின் தோழன் – புரோட்டீன் உணவின் முக்கியத்துவம்
உடலில் புரோட்டீன் பற்றாக்குறைவால், தசைகளின் பலம் குறைதல், சரும வறட்சி போன்ற பிரச்சனைகள் உருவாகிறது;
தசைகளின் தோழன் – புரோட்டீன் உணவின் முக்கியத்துவம்
நமது உடலில் தசைகள், சருமம், ஹார்மோன்கள், என்சைம்கள் ஆகியவை சிறப்பாக செயல்பட, புரோட்டீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் முக்கியமான வேலைகளை நிர்வகிக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்து. மனித உடலில் மொத்தம் 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் 8 அமினோ அமிலங்களை மட்டும் நம்முடைய உடல் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அவற்றை நாம் உணவின் மூலம் மட்டுமே பெற வேண்டும். மீதமுள்ள 12 அமினோ அமிலங்களை நமது உடலே உற்பத்தி செய்து கொள்ளும் தன்மையை உடையது. புரோட்டீனில் உள்ள இந்த சிறு அமினோ அமிலங்கள் தான் உடலின் வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாடுகளுக்கு ஆதாரமாகின்றன.
ஒருவரின் உயரம், உடல் பருமன், வயது, உடல் நிலை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொருத்து, அவரவர் தினசரி தேவையான புரோட்டீன் அளவு மாறுபடும். பொதுவாக உடற்பயிற்சி செய்யாத ஒருவர், தனது எடைக்கு ஏற்ப, ஒரு பவுண்டுக்கு 0.36 முதல் 0.6 கிராம் வரை புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சராசரி ஆணுக்கு தினமும் 51 முதல் 91 கிராம் வரை புரோட்டீன் தேவைப்படும்; பெண்களுக்கு இது 46 முதல் 75 கிராம் வரை இருக்கலாம்.
இந்த தேவைக்கேற்ப உணவின் மூலம் புரோட்டீன் கிடைக்காமல் இருந்தால், உடலில் புரோட்டீன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக, பல்வேறு உடல் பிரச்சனைகள் உருவாகும். குறிப்பாக, தசைகளின் பலம் குறைதல், இம்யூன் சக்தி சரிவு, சரும வறட்சி, அடிக்கடி நோய் தாக்குதல் போன்றவை நிகழக்கூடும். புரோட்டீன் குறைவால் உடலில் ஏற்படும் இந்த மாற்றங்களை சில முக்கிய அறிகுறிகள் மூலம் நம்மால் கவனிக்க முடியும். எனவே, உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொருவரும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.