ஈரோடு: மானிய விலை யூரியாவை கடத்தியவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ஈரோடு அருகே மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2025-03-16 04:00 GMT

அகமதுஅலி.

ஈரோடு அருகே மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மத்திய அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பணிக்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை கடத்தி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கடந்த மாதம் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசாருடன் வேளாண் துறையினர் சித்தோடு அருகே பேரோடு பி.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு, மத்திய அரசால் வழங்கப்படும் யூரியா உர மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் வேளாண்மை பணிக்காக மத்திய அரசின் சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை கடத்தி வந்து பதுக்கி வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து, யூரியாவை பதுக்கி வைத்ததாக பவானியை சேர்ந்த அகமதுஅலி (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மொத்தம் 185 டன் யூரியாவும், 5 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், கைதான அகமதுஅலியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர்.

அதன்படி, அகமதுஅலியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அகமதுஅலி போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Similar News