மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம்
![மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2025/02/07/1976586-kjvk.avif)
நாமக்கல் : மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நிதிநிலை அறிக்கை நகலை கிழித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் கு.சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, திமுக தொழிற்சங்கத்தைச் சோர்ந்த பழனியப்பன் ஆகியோர் மத்திய அரசின் தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிரான நிதிநிலை அறிக்கையை கண்டித்து பேசினர்.
தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள்
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தேசிய அளவில் சட்டம் இயற்றி ரூ. 4 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்
அதேபோல, திமுகவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில், தொமுச நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
திருச்செங்கோட்டில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு, அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் செங்கோடன் தலைமை வகித்தார். ஏஐடியுசி ஜெயராமன், ராமகிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் அன்புமணி உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மக்கள் விரோதப் போக்கும், தொழிலாளர் மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கு பாரபட்சமான திட்டங்களும், விவசாயம், நீர் மேலாண்மைக்கு பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்து நிதிநிலை அறிக்கையின் நகலை கிழித்தெறிந்து கண்டன முழக்கமிட்டனர். இதில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu