நாமக்கல் நகர அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டம்: முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர்

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, ப.வேலூர் எம்எல்ஏ வேலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
நாமக்கல்,
அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிமுக வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அஇஅதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்எல்ஏவுமான தங்கமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, ப.வேலூர் எம்எல்ஏ சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் கோயில் முன்புறம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருப்பதால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். 12 ந் தேதி பிறந்த நாளன்று தன்னை யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மூத்த முன்னாள் அமைச்சர் தங்கமணி அவரது ஆதரவாளர்கள் புடை சூழ, எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.
2021 சட்டசபை தேர்தலில், நாமக்கல் சட்டசபை தொகுதியில், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தற்போதைய மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். தேர்தலில் பாஸ்கர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் அவரது நண்பரான ஸ்ரீ தேவி மோகனுக்கு தேர்தலில் போட்டியிடும் ஆசை ஏற்பட்டது. இதையொட்டி 2024 பார்லி தேர்தலில் நாமக்கல் பார்லி தொகுதியில் போட்டியிட அவர் சீட் கேட்டார். ஆனால் ப.வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் தமிழ்மணிக்கு சீட் வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீ தேவி மோகன், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரை விட்டுப்பிரிந்து, தனது ஆதரவளாளர்களுடன் தனியாக செயல்பட்டு வருகிறார். கோழி, முட்டை மற்றும் கால்நடை மருந்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீ தேவி மோகனுக்கு அண்மையில் அஇஅதிமுக வில் வர்த்தக அணி மாநில இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி மூலம் சட்டசபை தேர்தலில் சீட் பெற வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக காய் நகர்த்தி வருகிறார். அதிமுக நடத்தும் கூட்டங்களில் தவறாமல் அவர் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், தனக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மூலம் மீண்டும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது ஆதரவளாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். அவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பல்வேறு நிகழ்ச்சிகளை புறக்கனித்து வருகிறார். இதையொட்டி இன்று ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் அவரும், அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை. இது நாமக்கல் நகர அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu