/* */

40 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: நாமக்கல் பாஜக வேட்பாளர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று நாமக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

40 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: நாமக்கல் பாஜக வேட்பாளர்
X

டாக்டர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம் கூறினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ.க வேட்பாளராக, அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில், அவர் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: யார் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக நடக்கும் இந்த லோக்சபா தேர்தலில், மோடி பிரதமராக வேண்டும் என, பாரத மக்களில் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். என் வெற்றி என்பது, பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி.

நாட்டில் ஊழலற்ற, வளர்ச்சியை நோக்கியே எங்களது பிரச்சாரம் அமையும். அரசின் இலவச திட்டங்கள் இல்லாமல், வளர்ச்சி திட்டங்கள் அவசியம் வேண்டும் என, மக்கள் விரும்பும் வகையில் செயல்படும் அரசாக, பிரதமர் மோடி அரசு இருக்கும். சேலம்-கரூர் அகல ரயில் பாதை திட்டம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம், 1982-ல் கோரிக்கை வைத்து, அதனை கொண்டு வர நான் பாடுபட்டேன். நாமக்கல் லோக்சபா தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நான் செய்து கொடுப்பேன்.

கட்சியின் கட்டளைக்கு ஏற்ப இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். நடக்க உள்ள தேர்தல், யார் பிரதமர், மோடி தேவையா, இல்லையா என்பது தான் முக்கியம். முன்னாள் தமிழக முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆரம்பிக்காத அணிகளை, இப்போதுள்ளவர்கள் ஆரம்பித்து உள்ளனர். அதில் உள்ளவர்கள், போதை பொருள் கடத்துபவர்களா மாறி உள்ளனர்.

பா.ஜ.க, ஜாதி, மதம் பார்க்காத கட்சி. பிரதமர் மோடி தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட அனைத்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்கிறார். சம்மந்தப்பட்டவர்களுடன் சேர்ந்து விழாவை கொண்டாடுகின்றார். ஆனால் தமிழக முதல்வர் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. இந்த நிலையில் அவர்கள் பா.ஜ., மீது மத துவேசம் பூசுகின்றனர். நாங்கள் மற்ற மதத்தினரை மதிக்க கூடியவர்கள்.

பொன்முடி வழக்கில் பா.ஜ.கவின் தலையீடு இல்லை என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நிரூபணமாகி உள்ளது. தமிழகத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் வி.ஐ.பி., வேட்பாளர்களை பா.ஜ., களம் இறக்கி உள்ளது எனவே இந்த தேர்தலில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என அவர் கூறினார்.

பா.ஜ.க, கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 22 March 2024 3:00 PM GMT

Related News