காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் புனித நீராட முடியாமல் காவடி பக்தர்கள் அவதி!
நாமக்கல் : காவிரி ஆறு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறியதால், தைப்பூசத்தையொட்டி, காவடி எடுத்து சென்ற முருக பக்தர்கள், புனித நீராட வழியின்றி அவதிக்குள்ளாகினர்.
நாடு முழுவதும் முருகன் கோவில்களில், இந்தாண்டு தைப்பூச திருவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், பரமத்திவேலுார் அடுத்த கபிலர்மலையில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு,பரமத்திவேலுார் பகுதிக்குட்பட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
அதன்படி, ஏராளமான பக்தர்கள் பரமத்திவேலுார் காசி விஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தம் எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்வர்.இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம், 110 அடியாக இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்கு மட்டுமே 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அதனால், காவிரி ஆறு தண்ணீர் இன்றி பாலைவனமாக காட்சி அளிக்கிறது. காவடி எடுத்து செல்லும்பக்தர்கள் புனிதநீராட தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகினர்.வேறுவழியின்றி டேங்கர் லாரியில் கொண்டு வந்த தண்ணீரில் காவடியை சுத்தம் செய்தும், புனித நீராடியும், தீர்த்தம் எடுத்துக்கொண்டு கபிலர்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று, அபிஷேகம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu