ரூ.5 கோடி செலவில் கட்டிய சேமிப்புக் கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் வீண்!
ஈரோடு : வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் மாவட்டந்தோறும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயிகள் தங்களது விளை பொருள்களை சேமித்து வைக்கவும், நியாயமான விலைக்கு விற்பனை செய்யவும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக உதவுகின்றன.
இங்கு விவசாயிகள் விடுமுறை நாள்கள் உட்பட அனைத்து நாள்களிலும் எந்த நேரத்திலும் விளை பொருள்களை கொண்டு வரலாம். அலுவலக வேலை நாள்களில் மட்டும் ஏலம் நடைபெறும்.
ஏலத்தில் கோரப்படும் அதிகபட்ச விலைக்கு விற்க விவசாயிகளுக்கு சம்மதமில்லை எனில், விளைபொருள்களை கிடங்குகளில் குறைந்தபட்ச வாடகைக்கு இருப்பு வைத்து பின்னா் விற்பனை செய்யலாம். இங்கு இருப்பு வைக்கப்படும் விளை பொருள்களுக்கு ரூ.2 லட்சம் வரை 5 சதவிகித வட்டியில் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக 180 நாள்கள் வரை பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விளை பொருள்களை விற்கும்போது சரியான எடை, உயா்ந்தபட்ச விலை, உடனடி பணம் கிடைப்பதுடன், கமிஷன் போன்ற பிடித்தம் இல்லை.
மேலும், உலா்கள வசதி, கணினி மூலம் தினசரி சந்தை நிலவரம் அறிதல், இருப்பு வைக்க கிடங்குகள், குறைந்த வட்டியில் பொருளீட்டுக் கடன், உழவா் நல நிதித் திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை இலவச காப்பீடு போன்ற பல்வேறு நன்மைகள் உள்ளன.
செயல்படு இல்லாமல் வீணாகும் கிடங்குகள்:
ஈரோடு மாவட்டம், பா்கூா் ஊசி மலைப் பகுதியில் அந்தியூா் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 500 டன் சேமிப்புக் கிடங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு அதே துறையின் மூலம் 250 டன் ஊரகக் கிடங்கு கட்டப்பட்டு அதுவும் பயன்படுத்தாமல் உள்ளது . அதேபோல, கடந்த 2024 ஆம் ஆண்டு கட்டப்பட்ட குளிா் பதன கிடங்கும் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இந்த மூன்று சேமிப்புக் கிடங்குகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த சேமிப்புக் கிடங்கு, அந்தியூா்-மைசூரு சாலையில் இருந்து 500 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது.
பெரும்பாலும் மானாவாரி விளை நிலங்களை கொண்ட பா்கூா் மலைப் பகுதியில் சேமிக்கின்ற அளவுக்கு தானியங்கள் உற்பத்தியும், அதை சேமித்து விற்பனை செய்கிற அளவுக்கு விவசாயிகளின் பொருளாதார நிலையும் இல்லை.
இவற்றை கவனத்தில் கொள்ளாமல் பல கோடி ரூபாய் செலவில் சேமிப்புக் கிடங்குகளை கட்டுவதற்கு வேளாண்மை துறை திட்டமிட்டது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனா் பா்கூா் மலை கிராமங்களைக் சோ்ந்த மக்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் கூறியதாவது:
விற்பனை குழுக்கள் மூலம் வேளாண் விளை பொருள்களை வாங்கவும் விற்கவும் அதை முறைப்படுத்தவும் தமிழக அரசால் 1987-இல் தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அமைக்கப்பட்டவைதான் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்.
தமிழகத்தில் 21 விற்பனைக் குழுக்கள் உள்ளன. இதன்கீழ் 268 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 15 சோதனைச் சாவடிகள், 108 ஊரக சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 108 தரம் பிரிக்கும் மையங்கள் செயல்படுகின்றன.
மறைமுக ஏல முறையின் மூலம் நெல், உளுந்து, பருத்தி, தட்டைப் பயிா், மணிலா, கம்பு, கேழ்வரகு, சோளம், எள், தேங்காய், மரவள்ளி உள்ளிட்ட விளைபொருள்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற மானாவாரி பயிா்கள் மட்டுமே விளையும் பா்கூா் மலைப் பகுதியில் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் 3 கிடங்குகள் அமைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் கிடக்கின்றன.
எனவே, இந்த சேமிப்புக் கிடங்குகளை வேறு எந்த வகையில் பயன்படுத்த முடியும் என்பதை வேளாண்மைத் துறை கவனத்தில் கொண்டு பயன்பாட்டுக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அங்கு செல்வதற்கான பாதைகளை ஒழுங்குபடுத்தி வாகனங்கள் எளிதாக மேலே செல்வதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu