வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அதிமுக குற்றச்சாட்டு

வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அதிமுக குற்றச்சாட்டு
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதை உணர்த்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றசாட்டினார்

வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதை உணர்த்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றசாட்டினார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் நேற்றிரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதாக அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை செய்கின்றனர்.

இந்நிலையில், முன்னாள் வருவாய் துறை அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்சி நிரவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் உதயகுமார் பேசியதாவது: மதுரை, வாடிப்பட்டியில் அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதையே காட்டுகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் முறையாக மழைநீர் வடிகால் அமைக்காமல் இருப்பது குறித்து வணிகவரிதுறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மேயர் இந்திராணியிடமே குற்றம்சாட்டியுள்ள சம்பவம் நகைப்புக்குரியது. இது மாவட்ட அமைச்சரின் இயலாமையை வெளிபடுத்துகிறது.

முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்கு புறம்பாக சில விஷமிகள் சமூக வலைதளங்களில் குறும்படம் வெளியிட்டுள்ளனர். இதனை தடை செய்து உரியவர்களை கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையில் நீரின் கொள்ளளவை 152 அடிக்கு உயர்த்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது என்றார் ஆர்.பி. உதயகுமார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், காளிதாஸ், எம்.வி.பி. ராஜா, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஸ் கண்ணா ,நிர்வாகிகள் வெற்றிவேல் ,ராஜேஷ் கண்ணா , மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ,லட்சுமி, அரியூர் ராதாகிருஷ்ணன், சந்தனத்துரை உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக, காவல் துறை கைகள் கட்டப்பட்டுள்ளன என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சரமாரியாக குற்றம் சாட்டி வருகிறார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், காவல் துறையினரின் செயல்பாடுகளை, கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடந்தது. முதல்வர் தலைமை வகித்தார்.தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொது மக்கள் புகார் மீது உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story