/* */

மண் ஆய்வு செய்ய வேளாண் அதிகாரி அழைப்பு

மண் ஆய்வு செய்து மகசூலை பெருக்க வேளாண் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மண் ஆய்வு செய்ய  வேளாண் அதிகாரி அழைப்பு
X

இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் பு.80 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பல்வேறு வகையான வேளாண்மை பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பட்டு வளர்ப்புப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வருடா வருடம் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதாலும், மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் மண்ணில் உள்ள சத்துக்கள் குறைந்து கொண்டே வருகிறது. மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களின் அளவு குறைந்து மகசூலை பெரிதும் பாதிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரிசல் மண், செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த குறுமண் போன்ற பல்வேறு மண் வகைகள் உள்ளது. மனிதர்கள் வயதுக்கும், செய்யும் பணிக்கும், பசிக்கும் ஏற்ப உணவு உண்பதை போல். மண்ணிலும் உள்ள சத்துக்களுக்கு ஏற்ப, பயிரிடும் பயிருக்கு ஏற்ப, பருவத்திற்கேற்ப சத்துக்கள் தேவை மாறுபடும். இந்த தேவையை கருத்தில் கொள்ளாமல் பயிருக்கு செயற்கை ரசாயன உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் கலப்பு உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தினாலும், குறைந்த அளவில் பயன்படுத்தினாலும் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு மகசூல் பாதிப்படைகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் மண்ணின் நிலை அறிந்து உரம் இட வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் முறைபடி சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக வளாகத்திலுள்ள மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு முடிவுகளைப் பெறலாம்.

கோடை பருவத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும் சமயத்தில் கோடை உழவிற்கு பிறகு, மண் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வதால் கோடைப் பருவம் மற்றும் பின்பு வரும் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்போகும் பயிர்களுக்குத் தேவையான உரப் பரிந்துரை பெற்று பயன் பெறலாம். மண் மாதிரி ஒன்றினை பரிசோதனை செய்ய ரூ.20 மற்றும் நீர் மாதிரி ஆய்வு செய்ய ரூ.20 மட்டுமே ஆகும். மேலும் விபரங்களுக்கு வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 May 2021 3:30 AM GMT

Related News