வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள்: ஆட்சியர் ஆலோசனை

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Update: 2024-05-24 01:30 GMT

மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4  ம் தேதி  எண்ணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் எண்ணப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் ஆலோசனை மேற்கொண்டார். 

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும் பணிபுரியும் அலுவலர்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 24 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் அடங்கியுள்ள ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,722 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஒரு மையத்துக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என மொத்தம் 1,722 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தலில் பயன்படுத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தலா 14 மேசைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அப்படிப்பாா்த்தால் ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் தொகுதிகளில் தலா 20 சுற்றுகளும், கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் தெகுதிகளில் தலா 21 சுற்றுகளும், திருவண்ணாமலை தொகுதியில் 22 சுற்றுகளும், அதிகபட்சமாக செங்கம் தொகுதியில் 24 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

ஆரணி தொகுதியில் 23 சுற்று வாக்கு எண்ணிக்கை:

ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,760 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என மொத்தம் 1,760 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தலில் பயன்படுத்தப்பட்டன. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தலா 14 சுற்றுகள் வாக்கு எண்ணப்படுகிறது. அப்படிப் பாா்த்தால் போளூா், வந்தவாசி தொகுதிகளில் தலா 21 சுற்றுகளும், மயிலம் தொகுதியில் 20 சுற்றுகளும், ஆரணி, செய்யாறு, செஞ்சி தொகுதிகளில் அதிகபட்சமாக தலா 23 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்படுகின்றன என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். 

இந்த கூட்டத்தில் ஆரணி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்தல் அலுவலர்கள்,  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News