ரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-23 02:21 GMT

பழக்கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள்

திருவண்ணாமலை நகரில் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை நகரில் உள்ள பல்வேறு பழ மண்டிகளில் மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் திருவண்ணாமலை நகரில் தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள பழமண்டியில் எத்தனால் சொல்யூஷன் பயன்படுத்தி வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதை கண்டுபிடித்தனர்.

குறிப்பாக இதுபோன்று பழங்கள் பழுக்க வைக்கப்படுவதால் இதனை உட்கொள்ளும் போது வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி தேரடி வீதியில் உள்ள மாம்பழ மண்டியில் சோதனை செய்த போது எத்தனால் பவுச் என்று சொல்லக்கூடிய வேதி பொருளை வைத்து மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதை கண்டறிந்தனர். குறிப்பாக இதுபோன்ற மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதால் மாம்பழம் முழுவதுமாக நச்சுத்தன்மை உள்ளதாக மாறும் எனவும் இதனால் இதனை உண்ணும் போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகமான வயிற்று வலி வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 500 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

அதைத்தொடர்ந்து, ரசாயனத்தை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ததாக 3 நபர்கள் மீது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், திருவண்ணாமலையில் உள்ள உணவகங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. சுகாதாரமான முறையில் உணவு சமைக்க வேண்டும், உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன், பாதுகாப்பு அலுவலர்கள் எழில், இசக்கை ராஜா, சுப்பிரமணியன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News