அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திர கிடங்கின் அறைகள் திறப்பு

வாக்குப்பதிவு இயந்திர கிடங்கின் பாதுகாப்பு வைப்பறைகளை கலெக்டர் திறந்து வைத்தார்.

Update: 2024-05-25 02:14 GMT

வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கினை திறந்து வைத்து ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு வைப்பறைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.

பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவ்விரு தொகுதிகளிலும் அண்மையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு மையங்களிலும் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 8 சட்டமன்ற பிரிவுகள் வாரியாக தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட வேண்டும். எனவே இவ்வாறு தடுப்புகளை ஏற்படுத்தும் பணிக்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு வைப்பறைகள் திறக்கப்பட்டன. தடுப்புகளை ஏற்படுத்தி முடித்தபிறகு மீண்டும் அறைகள் பூட்டப்படும் .

இந்நிகழ்வில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் குமரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News