கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!

கலைஞர் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட வேண்டும், அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 02:56 GMT

செயற்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழாவை உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோடு சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட கழக செயலாளர் தரணி வேந்தன் முன்னிலை வகித்தார்.

இச்செயர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொதுப்பணித்துறை அமைச்சருமான வேலு பேசுகையில்,

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் அந்தந்த பகுதியில் உள்ள கழக கொடி கம்பங்களுக்கு வர்ணம் தீட்டுவது, புதியதாக கொடி ஏற்றுவது, இனிப்புகள் வழங்குவது, சிறப்பு உணவு வழங்குவது, மருத்துவ முகாம், ரத்த தானம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல், மூன்று ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்துதல், உள்ளிட்ட அனைத்து விதமான நல உதவிகளை ஆண்டு முழுவதும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அந்தந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுதல், அரசு மருத்துவமனையில் ஜூன் மூன்றாம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்துதல் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் ஒன்றுபட்ட மாவட்ட கழக அவை தலைவர் வேணுகோபால் மற்றும் கழக முன்னணியினர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அண்ணாதுரையும் ஆரணி தொகுதி வேட்பாளராக தரணி வேந்தனையும் அறிவித்து அவர்களின் வெற்றிக்காக இரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கழக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், கழக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான வேலுவுக்கும் இந்த செயற்குழு கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தந்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், பெரும் முயற்சி எடுத்திட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு இந்த மாவட்ட கழகம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கழக மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமா,ர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அணி அமைப்பாளர்கள், மாவட்ட துணை செயலாளர், பேரவை செயலாளர்கள், வடக்கு மாவட்ட துணை செயலாளர், வடக்கு மாவட்ட அணி அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், நகர கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக வடக்கு மாவட்ட துணை செயலாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News