திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக குவிந்த பக்தர்களால் கோவிலுக்குள் செல்ல தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2024-05-24 01:54 GMT

அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் செல்ல காத்திருந்த பக்தர்கள்

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபாடு செய்கின்றனர்.

அதன்படி வைகாசி மாத பௌர்ணமி வரும் 22ம் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு தொடங்கி, 23ம் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 22 ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பௌர்ணமி இரண்டாவது நாளான நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதன் பிறகு நேற்று காலை 10 மணிக்கு மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்காக அதிகரிக்க தொடங்கியது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாகவும் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து இருப்பது காரணமாகவும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வருகை நேற்று வெகுவாக அதிகரித்தது. அதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வருகையும் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது.

அதிலும் குறிப்பாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சுவாமி தரிசனத்திற்கு கிட்டத்தட்ட 5 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் சூழ்நிலை உருவானது.

நேற்று பகல் 2 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் மிக அதிகரிக்க தொடங்கியது.

நான்கு மணி நேரத்திற்கு மேலாக க்யூ லைனில் காத்திருந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்ற பொழுது அம்மணி அம்மன் கோபுர பகுதி அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு வேலியை அகற்றிவிட்டு கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்த பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவே பௌர்ணமி முடிந்து விட்டது என எண்ணி பாதுகாப்புக்கு வந்திருந்த வெளியூர் போலீஸ்காரர்களும் தங்களது ஊர்களுக்கு நேற்று காலை செல்ல தொடங்கி விட்டனர்.  இதனால் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அம்மணி அம்மன் கோபுரம், ராஜகோபுரம், திருமஞ்சன கோபுர பகுதிகளில் க்யூ லைனில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் தடுப்பு வேலிகளை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதிகளில் கோவில் ஊழியர்களும் போதுமான அளவு இல்லாததால் அங்கு இருந்த ஊழியர்களாலும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒவ்வொரு மாத பௌர்ணமியின் போதும் பௌர்ணமி தினம் மற்றும் அதற்கு மறு தினமும் கூடுதல் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News