ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்: கூடுதல் ரயில்கள் இயக்க பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2024-05-24 02:10 GMT

ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபாடு செய்கின்றனர்.

அதன்படி வைகாசி மாத பௌர்ணமி வரும் 22ம் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு தொடங்கி, 23ம் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 22 ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று மாலையுடன் முடிந்த நிலையில் கிரிவலத்திற்கு வந்த பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றும் நேற்று முன்தினமும் திருவண்ணாமலையில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.பௌர்ணமி இரண்டாவது தினமான நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த பக்தர்கள் கிரிவலம் முடித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் சிறப்பு ரயில்கள் இல்லாததால் அவதி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் பௌர்ணமி தினத்தன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு பேருந்தும் சிறப்பு ரயில்களும் நேற்று இயக்கப்படாததால் திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தில் விடியற்காலை வழக்கம் போல் காட்பாடி வழியாக சென்னைக்கு செல்லும் ரயில் மற்றும் விழுப்புரம் மார்க்கமாக விழுப்புரம் செல்லும் ரயில் என இரு ரயில்களும் திருவண்ணாமலைக்கு வந்தடைந்தது.

அப்போது தங்கள் ஊருக்கு செல்ல காத்திருந்த பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும் முண்டி அடித்துக் கொண்டும் ரயிலில் ஏற முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரயில்வே காவல்துறையினர் உடனடியாக அவர்களை கியூ வரிசையில் செல்ல அறிவுறுத்தி ஒவ்வொருவராக ரயிலில் ஏற வழிவகை செய்தனர்.

அப்போதும் ரயிலில் இடம் கிடைக்காத ஆயிரக்கணக்கானோர் காத்திருந்து அடுத்த ரயிலில் சென்றனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் தலையாகவே இருந்தது.

இதே நிலையில் தான் பேருந்து நிலையத்திலும் ஏற்பட்டது. சிறப்பு பேருந்துகள் நேற்று அதிகாலையிலேயே புறப்பட்டு சென்று விட்டதால் நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்து நிலையத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

பௌர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கூடுதல் பேருந்துகளும் ரயில்களும் தொடர்ந்து இரண்டு நாட்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News