மீண்டும் பரபரப்பு ஏற்படுத்திய நித்தியானந்தர்

நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு ராட்சச லாரியில் கொண்டுவரப்பட்ட தேர் பீடம். திருவண்ணாமலையில் பரபரப்பு

Update: 2023-01-10 01:12 GMT

நித்தியானந்தர் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்ட தேர் பீடம்

பரபரப்புக்கு மறுபெயர் நித்யானந்தா! நித்தியானந்தர் எங்கு உள்ளார் என்ன செய்கிறார் என்று எதுவுமே தெரியாத நிலையில் அவரைப் பற்றிய செய்திகள் மட்டும் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் நேற்று கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பிரம்மாண்ட தேர் வந்ததால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. இதில் கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது.

மேலும், கர்நாடக மாநிலம் பிடதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவரது ஆசிரமம் இருந்த நிலையிலும், தற்போது இந்த ஆசிரமங்களில் தங்காமல் கைலாசா எனும் இடத்தில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர் தங்கி இருக்கும் கைலாசா எனும் இடம் எங்கே இருக்கிறது, அங்கே யார்? யார் தங்கி இருக்கின்றார்கள் என்கிற விவரங்கள் எல்லாம் தொடர்ந்து மர்மமாக நீடித்து வருகிறது. சமீபத்தில் இவரது உடல் நலிவுற்றிருந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

கிரிவலப்பாதையில் உள்ள அடிஅண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு வருவதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் இவரது சீடர்கள் சிலர் மட்டும் தங்கி இருந்தனர். வெளியாட்கள் இந்த ஆசிரமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நித்யானந்தரின் 46வது அவதார தின தொடர் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கடந்த 20 நாட்களாக திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா பீடதி ஆசிரமத்தில் அவரது சிஷ்யர்கள் சிஷ்யைகள் ஏராளமானோர் வரத் தொடங்கினர் .

மீண்டும் ஆசிரமத்தில் பெரிய அளவில் அன்னதானம் தொடங்கியது.  இந்த அன்னதானத்திற்கு ஔஷத அன்னதானம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

அன்னதானத்திற்கு செல்லும் பக்தர்கள் சுவாமிஜியின் மூர்த்தி அருகே நின்று செல்பி எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் தனி இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. .

இந்நிலையில், நேற்று ராட்சத லாரி மூலம் தேர் பீடம் கொண்டுவரப்பட்டு நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு உள்ளே வைக்கப்பட்டது. அதனை பெரிய கிரேன் மூலம் இறக்கி வைத்துள்ளனர். சக்கரங்களுடன் கூடிய தேரின் பீடம் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, எதற்காக கொண்டு வந்துள்ளனர், அதன் நோக்கம் என்ன என்கிற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை

இந்த தேர் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும், அவதார தின விழா நிறைவின் போது கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அவதார தின விழா எப்போது நடைபெறும் என்றும் தெரியவில்லை.

இதுகுறித்து ஆசிரமத்தின் அருகில் இருந்த சீடர்களிடம் கேட்ட போது, பல்வேறு கோவில்களில் தேரோட்டடம் நடத்தப்படாமல் உள்ளதால் தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தேர் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் எங்கிருந்து தேர் கொண்டு வரப்பட்டது என்று அவர்கள் தெரிவிக்கவில்லை. திடீரென நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு தேர் கொண்டு வரப்பட்ட தகவல் கிரிவலப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News