விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை

கலசப்பாக்கம் அருகே நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்

Update: 2024-05-24 03:10 GMT

நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை  முற்றுகையிட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி அப்பகுதி விவசாயிகள் போளூர் பொதுப்பணித்துறை நீர் பாசன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுக்கா மேல் சோழங்குப்பம் கிராமத்தில் புது ஏரி இரட்டை மதகு பாசன கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயின் பாதையை அப்பகுதி விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்துள்ளதால் மழை நீர் மட்டும் ஏரியிலிருந்து வெளியேறும் கசிவு நீர் பாசன கால்வாயில் செல்லாமல் பயிர் செய்துள்ள நிலத்தில் சென்று தேங்குகின்றது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் நிலத்தில் சாய்ந்து பயிரில் முளைப்புத்திறன் ஏற்படுகிறது.

மேலும் அவ்வாறு தேங்கும் நீரில் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் விவசாய சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள புது ஏரி இரட்டை மதக்கு பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார வேண்டும் என கடந்த ஆண்டு மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் மற்றும் தொகுதி எம்எல்ஏ, வட்டாட்சியர் அலுவலகம், போளூர் நீர்ப்பாசன அலுவலகம் என அரசு அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள நிலத்தில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புது ஏரி இரட்டை மதகு பாசன கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் போளூரில் உள்ள பொதுப்பணித்துறை நீர்ப்பாசன அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நீர் பாசன துறை உதவி பொறியாளர் ராஜகணபதி கைபேசியில் விவசாயிகளை தொடர்பு கொண்டு இன்று வெள்ளிக்கிழமை ஏரிக்கால்வாயை ஆய்வு செய்து ஆக்கிரமைப்பை அகற்றம் செய்வதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், கலசப்பாக்கம் ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல், பாமக இளைஞரணி அமைப்பாளர் அரிகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News