கந்து வட்டிக் கொடுமை டிரைவர் மனைவி தற்கொலை முயற்சி..!
திருவண்ணாமலையில் கந்துவட்டி கொடுமையால் டிரைவர் மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே கந்துவட்டி கொடுமையால் நெல் அறுவடை இயந்திர வாகன டிரைவரின் மனைவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா மேல் சோழ குப்பம் வையாபுரி தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார், இவர் நெல் அறுவடை இயந்திர வாகனத்தில் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஐஸ்வர்யா, இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலசப்பாக்கம் தாலுகா பெரியபாளையம் கிராமத்தை சேர்ந்த சௌந்தர் என்பவரிடம் பிரவீன் குமார் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளாராம்.
இதற்கு வட்டியுடன் ரூபாய் 9 லட்சத்து 20 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளாராம்.
மேலும் வட்டி கேட்டு சௌந்தர் தொல்லை கொடுத்து வந்தாராம். கடந்த 28ஆம் தேதி ஐஸ்வர்யா தனது தந்தையின் வீட்டிற்கு சென்று இருந்தாராம். அப்போது அங்கு வந்த சௌந்தர் கொடுத்த பணத்திற்கு 10 பைசா என கணக்கிட்டு வட்டி தர வேண்டும் என மிரட்டியுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா ஒரு பைசா வட்டி என சொல்லிவிட்டு 10 பைசா வட்டி கேட்கிறீர்களே என கேட்டுள்ளார். அப்போது சௌந்தர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் வீட்டில் இருந்த ஐஸ்வர்யாவை பிடித்து இழுத்து வெளியே தள்ளி வீட்டை பூட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளாராம்.
இதனால் மனம் உடைந்த ஐஸ்வர்யா நெல் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அங்கு இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்