செங்கம் அருகே மது கடையில் உயர் ரக மது திருடிய வழக்கில் ஒருவர் கைது
செங்கம் அருகே மதுக்கடையில் உயர் ரக மது திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
செங்கம் அருகே மதுக்கடையில் ரூ. 1.5 லட்சம் உயர்ரக மதுபானங்கள் திருடப்பட்ட வழக்கில், போலீசார் அதிரடியாக ஒருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து வலை விசித் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு கடையை திறப்பதற்காக அந்த கடையின் சேல்ஸ்மேன் வந்திருந்தார்.
அப்போது கடையில் ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சேல்ஸ்மேன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையை திறந்து பார்த்த போது ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான உயர்ரக மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த உடனடியாக சேல்ஸ்மேன் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த செங்கம் போலீசார் அப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது சிசிடிவி கேமராவில் இருந்த ஹார்ட் டிஸ்க் கழற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான திவான், பூவரசு என்பவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் கடந்த இரண்டு நாட்களாக உயர்ரக மது பாட்டில் வைத்துக் கொண்டு உல்லாசமாக குடிபோதையில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.
இதனை நோட்டமிட்ட காவல்துறையினர் முருகனை பின் தொடர்ந்து சென்று முருகனின் செயல்பாடுகளை கண்காணித்தனர். அதில் மதுபான கடையை உடைத்து பாட்டில்கள் திருடியது முருகன் தான் என தெரிய வந்தது.
உடனடியாக முருகனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் மதுக்கடையில் திருடிச் சென்று பதுக்கி வைத்திருந்த உயர்ரக மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். முருகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்களுக்கு சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பூவரசு திவான் ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.