தேனியில் நடமாடும் இரவு நேர பேக்கரிகள்... வீடு தேடி வரும் சூடான பிரட், பன், பப்ஸ்

தேனியில் இரவு நேர நடமாடும் பேக்கரிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

Update: 2021-07-21 08:15 GMT

மழைக்காலத்திலும் இரவு நேரத்தில் சூடாக வீடு தேடி வரும் பிரெட், பன், பப்ஸ், சமோசா, தேங்காய் பன் போன்ற தின்பண்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இரவு நேர நடமாடும் பேக்கரி தொழில் களைகட்டி வருகிறது.

நடமாடும் வியாபாரம், சாலையோர வியாபாரம் என்பதெல்லாம் தமிழகத்திற்கு மிகவும் பழகிப்போன விஷயம். அதனையும் தேனியில் சற்று புதுமையாக செய்து வணிகர்கள் சிலர் கல்லா கட்டுகின்றனர். மாலை ஆறு மணிக்கு மேல் தான் இவர்களது வியாபாரமே தொடங்கும். நடமாடுகள் மூன்று சக்கர சைக்கிள் வாகனங்களில் சுற்றிலும் அடைக்கப்பட்ட சதுர வடிவ தகர கூண்டு செய்து ஒரு புறம் மட்டும் உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையில் கண்ணாடி பதித்துள்ளனர். உள்ளே இருக்கும் பொருட்கள் சூடாக பிரெஷ்ஷாக இருக்கும் வகையில் சில அடிப்படை வேலைகளை செய்துள்ளனர்.

மாலை ஆறு மணிக்கு வியாபாரத்தை தொடங்கும் இவர்கள் இரவு பத்து மணி வரை தெருக்களில் வலம் வருவார்கள். நீண்ட நாட்களாக நடக்கும் தொழில் என்பதால் எந்தெந்த தெருவில் யார் யார் வாங்குவார்கள் என்ற விவரம் எல்லாம் தெரியும். அவர்களின் வீடுகளுக்கு சென்று பொருட்களை கொடுத்து விட்டு, மீதம் உள்ள பொருட்களை விற்க மார்க்கெட் பகுதிக்கு வந்து விடுவார்கள்.

தேனி மார்க்கெட்டும் மதுரை போல் ஒரு துாங்காத மார்க்கெட் தான். இரவு இரண்டு மணிக்கு கூட கலகலப்பாக, பரபரப்பாகவே இருக்கும். இவர்கள் இங்கு வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பி விடுவார்கள். தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி நல்ல முறையில் பெய்து வருகிறது. மழையை கண்டு மற்ற சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் சங்கப்படும் போது, இந்த நடமாடும் பேக்கரிக்காரர்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் உலா வருகின்றனர். காரணம் குளுமையான கிளைமேட் தான் எங்களின் ஜீவாதாரம் என்கிறார் பேக்கரி நடத்தும் செல்வம். 

Tags:    

Similar News