பெரியகுளம் பகுதியில் மணல் கொள்ளை அமோகம்

பெரியகுளம் பகுதியில் அமோகமாக நடக்கும் மணல் கொள்ளை. அதிகாரிகள் அலட்சியத்தால் அழியும் இயற்கை வளம்

Update: 2024-02-04 13:58 GMT

மணல் கடத்தல் - கோப்புப்படம் 

பெரியகுளம் தாலுகாவில் அதிகாரிகள் கண்டு கொள்ளததால் செலும்பு ஆறு, சிற்றோடைகளில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. ஓடைகளில் சிறுக, சிறுக சேகரித்து தனியார் நிலத்தில் குவித்து டிராக்டரில் கடத்தல் தொடர்கிறது.

பெரியகுளத்தை சுற்றி வராக நதி, பாம்பாறு, செலும்பாறு, கல்லலூறு போன்ற ஆறுகளும், நூற்றுக்கண்கான சிற்றோடைகள் செல்கின்றன. ஆறு, சிற்றோடைகள் மூலம் வரும் நீரை பயன்படுத்தி விவசாயம் அமோகமாக நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் இப் பகுதியில் நடந்த மணல் கொள்ளையால் நீர் நிலைகளில் மணற்பாங்கு குறைந்து வறண்டு இருந்தது.

அதன்பின் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் ஓரளவிற்கு மணல், மண் கடத்தில் குறைந்து இருந்தது. மணல் தட்டுப்பாடு, கெடுபிடிகளால் கட்டுமான பணி செய்வோர் அனைவரும் எம்.சாண்ட், பி. சாண்ட் ஆகியவற்றை பயன்படுத்தினர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெரியகுளம் பகுதியில் மணல் கடத்தல் அமோகமாக நடக்கிறது. மாவட்டத்தில் மணல் குவாரிகளே இல்லாத நிலையில் பல இடங்களில் நடக்கும் கட்டுமானங்களில் திருட்டு மணல் பயன்படுத்துகின்றனர். ஒரு டிராக்டர் மணல் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர்

சில நாட்களுக்கு முன் பெரியகுளம் கும்பக்கரை செல்லும் ரோட்டில் உள்ள செலும்பு ஆற்றில் அடையாளம் தெரியாத நபர்கள் மூடைகளில் மணலை அள்ளி காளியம்மன் கோயில் அருகே தரிசு நிலங்களில் குவித்து வருகின்றனர். . இதனை யூனிட் கணக்கில் விலை பேசி இரவில் டிராக்டரில் கடத்தி செல்கின்றனர். ஒரு சில கும்பல் ஓடைகளில் மணல் அள்ளி ஒரு மூடை மணல் ரூ.80 வீதம் டிராக்டரில் 100 மூடை, 150 மூடை என ஏற்றி தேவைப்படும் இடத்தில் இரவில் கொட்டி செல்கின்றனர்.

மணல் கொள்ளையை தடுக்க வருவாய் துறை, கனிம வளத்துறை, மற்றும் காவல்துறை என யாரும் கண்டு கொள்ளாததால் விருப்பம் போல் இரவிலும், அதிகாலையிலும் மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. இது போன்ற மணல் கொள்ளை மாவட்ட அளவில் பரவலாக நடக்கிறது. மணல் கடத்தலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News