‘தங்க தமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவி ராஜினாமா’ பி. மூர்த்தி ஆவேசம்

தங்க தமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் அமைச்சர் பதவி ராஜினாமா செய்வேன் என அமைச்சர் பி. மூர்த்தி ஆவேசமாக பேசினார்.

Update: 2024-03-25 14:11 GMT

தேனி நாடாளு மன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தி அமைச்சர் பி. மூர்த்தி பேசினார்.

தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க.   வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை வெற்றி பெற செய்ய முடியாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் பி.மூர்த்தி ஆவேசமாக பேசினார்.

தேனி நாடாளுமன்ற தொகுதி தமிழகத்தையே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது.இதற்கு காரணம் அங்கு  பாரதிய ஜனதா கூட்டணியில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், தி.மு.க. வேட்பாளராக தேனி மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ் செல்வனும் மோதுவது தான். இவர்கள் இருவரும் ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்தவர்கள். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டபோது அவருக்கு தளபதி போல் இருந்தவர் தான் இந்த தங்க தமிழ் செல்வன். பின்னர் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய நேரத்தில் தங்க தமிழ் செல்வன் அவரிடம்  இருந்து விலகி திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். உடனடியாக அப்போது அவருக்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் தேர்தல் களத்தில் மோதுகிறார்கள். இதன் காரணமாக தான் இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரபதிவு துறை அமைச்சர் பி.முர்த்தி பேசியதாவது:-

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும். 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வேன்.

இவ்வாறு அவர் ஆவேசமாகபேசினார்.

மேலும் அவர் பேசும்போது  உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால் தான் நான் தற்போது அமைச்சராக பதவி உயர்ந்துள்ளேன். எனவே கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News