24 வகையான இயற்கை சத்துக்கள் நிறைந்த பனங்கற்கண்டு
சித்த வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பனங்கற்கண்டில் 24 வகையான இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளன.
பனங்கற்கண்டு சிறந்த ஒரு நாட்டு மருந்து. சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமே.
பனை மரத்தில் இருந்து மனிதர்கள் சாப்பிடுவதற்கு பனங்கிழங்கு, நுங்கு, கள் போன்றவை கிடைக்கின்றன. “பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும்.
முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
நமது முன்னோர் பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சியே பயன்படுத்தி வந்தார்கள். இதனால் அவர்கள் தம் குரல்வளம் மாறாமல் இருந்ததோடு சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சல், காய்ச்சலின்போது வரக்கூடிய உடல் சூடு போன்றவற்றைத் தணிக்கும்.
குறிப்பாக இதில் உள்ள குளுக்கோஸ் மெலிந்து, தேய்ந்து வாடி ஒட்டிப்போன குழிவிழுந்த கன்னத்துடன் காட்சியளிக்கும் குழந்தைகளின் உடல்நிலையைச் சீராக்கி நல்ல சக்தியைத் தரும்.
பசியின்மை, செரிமானக்கோளாறு, வாய்வுத்தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமம், சுக்குப்பொடி, மிளகுப்பொடி, ஏலக்காய், திப்பிலியுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இந்தக் குடிநீர் உடல் வலியைப் போக்குவதோடு உணவுக்குழாயில் ஏற்படும் பிரச்னைகளையும் சரிசெய்யும். ஆஸ்துமா நோயாளிகள் ஓமம், ஆடாதொடை அல்லது அதன் இலைப்பொடி, கசகசாவுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் தயாரித்துக் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அனைத்து மருந்துகளிலும் முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு பொருள் என்றால் அது பனங்கற்கண்டாகும். பனங்கற்கண்டின் அற்புத மருத்துவ நன்மைகள்
பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.
1/2 தேக்கரண்டி ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.
2 பாதாம் பருப்பு, 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு, 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.
1/2 தேக்கரண்டி மிளகுத்தூள், 1/2 தேக்கரண்டி நெய் மற்றும் 1/2 தேக்கரண்டி பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி குணமாகும்.
சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல், கண்பார்வை அதிகரிக்கும்.
பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கலாம்.
2 தேக்கரண்டி வெங்காய சாறு மற்றும் 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் பிரச்சினை குணமாகும்..
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண் அகலும்.
பனங்கற்கண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் குறையும்.
பனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
பனங்கற்கண்டில் இருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உட்பட அனைத்து சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.