தேனி மாவட்டத்தில் நீர் நிரம்பி வழியும் கண்மாய்களில் குவியும் கொக்குகள்

தேனி மாவட்டத்தில் நீர் நிரம்பி உள்ள கண்மாய்களில் கொக்குகள் அதிகம் முகாமிட்டுள்ளன.;

Update: 2024-01-10 03:23 GMT

தேனி அருகே ஒரு கண்மாய் மற்றும் புதர்களில் அமர்ந்துள்ள கொக்குகள்.

தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவு பணிகள் கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலையில் உள்ளது. வயல்களில் நடவு பணிகள் நிறைவு பெற்றதால், அங்கு மேய்ந்து கொண்டிருந்த கொக்குகள் தற்போது கண்மாய்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளன. வடகிழக்கு பருவமழை ஜனவரி 10ம் தேதியை தாண்டியும் தொடர்வதால் தேனி மாவட்டத்தில் நிரம்பாத கண்மாய்களே இல்லை என்ற ஒரு நல்ல சூழல் உருவாகி விட்டது.

அத்தனை கண்மாய்களும் நிரம்பி வழிகின்றன. இந்த கண்மாய்களில் நீர் இருப்பதால், மீன் மற்றும் புழுக்கள் உள்ளிட்ட சிறிய நீர் வாழ் உயிரினங்கள் அதிகம் இருக்கின்றன. கொக்குகள் அமர வசதியாக கண்மாய்களில் மரங்களும் உள்ளன. இதனால் இந்த மரங்களில் அமர்ந்திருக்கும் கொக்குகள் தனக்கு தேவையான உணவினை நீரில் இருந்து எடுத்துக் கொள்கின்றன.

தற்போதைய நிலையில் தேனி மாவட்டத்தின் பெரும்பாலான கண்மாய்களில் வெள்ளை கொக்கு இனங்கள் அதிகம் குவிந்துள்ளன. தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் இருபுறமும் உள்ள கண்மாய்களில் இந்த கொக்குகளை அதிகம் காணலாம்.

இதனால் கார், டூ வீலர்களில் பயணிப்பவர்கள் தங்களது வாகனத்தை ரோட்டோரம் நிறுத்தி விட்டு, கொக்குகளை ரசித்து தங்களது செல்போன்களில்  படம் எடுத்த பின் மீண்டும் பயணம் செய்கின்றனர். கிராமப்பகுதிகளில் உள்ள கண்மாய்களிலும் இதேபோல் கொக்குகள் அதிகம் உள்ளன. மாடுகள் மொத்தமாக மேய்ச்சலுக்கு செல்லும் நிலங்களிலும் கொக்குகள் மாட்டு கூட்டங்களின் பின்பு செல்கின்றன.

மாடுகள் நடந்து சென்ற இடங்களில் மண்ணை பெயர்த்து விட்டு செல்லும். அந்த இடங்களில் இந்த கொக்குகளுக்கு தேவையான உணவுகளான சிறு பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அதனை சாப்பிடவே மாடுகளின் பின்பு கொக்குகள் பறக்கின்றன என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News