இந்த ஆண்டு முழுவதும் பெரியாறு நீர் மட்டம் 142 அடியை எட்டவில்லை
பெரியாறு நீர் மட்டம் 2023ம் ஆண்டு முழுவதும் உச்சநீதிமன்றம் அனுமதித்த கொள்ளவான 142 அடியை எட்டவேயில்லை.
முல்லைப்பெரியாறு அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 152 அடியாகும். ஆனால் கேரள அரசு அணை பலகீனமாக உள்ளதாக கூறி வீண் வதந்திகளை கிளப்பி அணையின் நீர் மட்டத்தை குறைத்தது. தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்து, மத்திய நீர் வளத்துறையின் பல்வேறு நிபுணர்குழுக்களின் ஆய்வுகளின் கீழ் அணை நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது.
ஆனால் கேரள அரசு பெரியாறு நீர் பிடிப்பு வனப்பகுதியில், பல்வேறு தடுப்பணைகள், சிற்றணைகளை கட்டி அணைக்கு வரும் நீரின் பெரும் பங்கினை கேரளாவிற்குள் திருப்பி விட்டுள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க ரூல்கர்வ் முறையினையும் கொண்டு வந்தது. இத்தனை தடைகளையும் தாண்டி பெரியாறு நீர் மட்டம் அவ்வப்போது 142 அடியை தொட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு கடந்த வாரம் அணை நீர்மட்டம் 141.25 அடி வரை உயர்ந்தது. எப்படியும் 142ஐ தொட்டு விடும் என தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்கள் கொண்டாட்டத்திற்கு தயாராக இருந்தனர்.
அதற்குள் மழையளவு குறைந்து நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் அணை நீர் மட்டம் சரியத்தொடங்கி விட்டது. இன்று அதாவது டிசம்பர் 30ம் தேதி அன்று காலை நிலவரப்படி அணை நீர் மட்டம் 138.85 அடியாக இருந்தது. இந்த ஆண்டு கடந்து புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இனிமேல் மழை பெய்து நீர் மட்டம் 142 அடியை எட்ட வாய்ப்புகள் இல்லை. எனவே கடைசி வரை 142 அடியை நீர் மட்டம் எட்டி விடும் என்ற விவசாயிகளின் நம்பிக்கை பொய்த்துப்போனது.