தேனியில் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல உதவும் ஆசிரியர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் நான்கு வழிச்சாலையின் ஓரங்களில் இருப்பதால் மாணவர்கள் சாலையை கடக்க ஆசிர்யர்கள் உதவி வருகிறார்கள்.

Update: 2024-01-10 03:40 GMT

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல உதவும் ஆசிரியர்கள்.

தேனி மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு போக்குவரத்து அதிகரித்து விட்டது. குறிப்பாக நான்கு வழிச்சாலை தேனி மாவட்டத்தின் பல நகர் மற்றும் கிராமப்பகுதிகளை கடந்து செல்கிறது. இந்த ரோட்டின் ஓரங்களில் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளின் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை.

இந்த பள்ளிகள் கட்டப்பட்ட போது, ரோடுகள் குறுகலாகவும், வாகன போக்குவரத்து இன்றியும் காணப்பட்டன. இதனால் அப்போது மாணவ, மாணவிகள் எளிதில் சென்று வந்தனர். இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு வசதியாக அமைக்கப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்தும் பல நூறு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் இந்த ரோடுகளை கடந்து மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் சென்று வருவது என்பது மிகவும் சிரமம் நிறைந்த காரியமாக உள்ளது. இந்த சிக்கலை தீர்க்க பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் காலையில் மாணவ, மாணவிகளுக்கு முன்னதாகவே பள்ளிக்கு வந்து ரோட்டோரம் நின்று விடுகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை அவர்கள் பாதுகாப்பாக ரோட்டை கடத்தி பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

இதே போல் மாலையில் பள்ளி முடிந்ததும், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் உடனடியாக  வீடு சென்று விடாமல், அத்தனை மாணவ, மாணவிகளையும் ரோட்டை கடத்தி அனுப்பி வைத்த பின்பே வீடு திரும்புகின்றனர். தேனி மட்டுமின்றி கோட்டூர், சீலையம்பட்டி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, அரசு பள்ளி என பாகுபாடு எதுவும் இன்றி அத்தனை பள்ளி ஆசிரியர்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Tags:    

Similar News