ஏடிஎம்மில் பணம் எடுப்போரிடம் மோசடி; வாலிபர் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் ஏ.டி.எம்.,க்கு வரும் பொதுமக்களிடம் பணம் எடுப்பது, பணம் போடுவது போல் நடித்து பல ஆயிரம் மோசடி செய்த பட்டதாரி வாலிபர் போலீசிடம் சிக்கினார்.

Update: 2021-07-19 08:15 GMT

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்போர் மற்றும் டெபாசிட் ெவரும் பொதுமக்களிடம் பல ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, பரமேஷ்வரன் என்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் அருகே  தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருபவர் கணேசன். இவர் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்.,இயந்திரத்தில் தனது அண்ணன் கணக்கில் ஆயிரத்து ஐநுாறு ரூபாய் பணம் போடுவதற்காக சென்றார்.

அப்போது, எப்படி பணம் டெபாசிட் செய்வது தெரியாததால் அருகிலிருந்த அடையாளம் தெரியாத ஒரு வாலிபரிடம் பணத்தை கொடுத்து தனது அண்ணனின் கணக்கிற்கு அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். அந்த வாலிபர் பணத்தை தனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். 

பின்னர், கணேசனிடம் உனது அண்ணனுக்கு பணம் சென்று விட்டது என்று சொல்லி விட்டு அங்கிருந்து தலைமறைவானார்.  கணேசன் தனது அண்ணனுக்கு போன் செய்து பணம் வந்துவிட்டதா எனக் கேட்க அவர் பணம் வரவில்லை கூறி உள்ளார். திரும்பவும் ஏ.டி.எம்.,க்கு வந்த கணேசன் அந்த நபரை தேடி அலைந்துள்ளார். அவர் எங்கும் கிடைக்காததால் பணத்தை ஏமாந்த கணேசன், தாம் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார் .

இதேபோல், மஞ்சளாறு அணை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது அக்கவுண்டில் இருக்கும் பணத்தை எடுப்பதற்காக அதே வங்கி ஏடிஎம் -க்கு வந்துள்ளார். அவருக்கு பண பரிவர்த்தனை தெரியாததால் அங்கு நின்று கொண்டிருந்த அதே வாலிபரிடம் தனது வங்கி கணக்கில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

அந்த வாலிபர் மீண்டும் பணத்தை எடுத்து முருகேசனிடம் தரும் போது ஐந்தாயிரம் ரூபாயினை தனது அக்கவுண்டில் போட்டுக்கொண்டு, பத்தாயிரம் ரூபாய் மட்டும் முருகேசனிடம் கொடுத்துள்ளார். இதற்கு மேல் உங்கள் கணக்கில் பணம் இல்லை எனக்கூறிவிட்டு தலைமறைவானார்.

இதனையடுத்து, முருகேசன் மற்றொரு நபர் மூலமாக தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு உள்ளது எனக் கேட்டபோது, அதில் இருந்த 15000 ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்தது. உடனே முருகேசன் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். முருகேசனிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு தேவதானப்பட்டி போலீசார் வங்கி ஏடிஎம் இருக்கும் இடத்திற்கு வந்து பார்த்தபோது அதே வாலிபர் ஏடிஎம் அருகே அமர்ந்து இருந்தார். முருகேசன் தன்னை ஏமாற்றியது இவர் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

போலீசார் அவரிடம் விசாரித்த போது அவர், அருகில் உள்ள காமக்காபட்டி பகுதியை சேர்ந்தவர், பட்டப்படிப்பு முடித்த வாலிபர் என்பதும், பெயர் பரமேஷ்வரன் என்பதும் தெரியவந்தது. இவர் இதேபோல் பலரிடம் பல ஆயிரம் ரூபாய் ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பரமேஷ்வரனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News