திருமயம் தொகுதியில் புதிய நியாயவிலைக்கடை: அமைச்சர் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 690 முழுநேர அங்காடிகளும், 327 பகுதிநேர அங்காடிகளும் என மொத்தம் 1,017 அங்காடிகள் உள்ளன;
புதுக்கோட்டை மாவட்டம் ந.புதூர் நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் இயங்கும் ந.புதூர் நியாயவிலைக் கடையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் புதிய நியாய விலைக் கடைகள் திறந்து வைப்பதன் மூலம் வீண் அலைச் சலை தவிர்ப்பதுடன், தரமான உணவுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 690 முழுநேர அங்காடிகளும், 327 பகுதிநேர அங்காடிகளும் என மொத்தம் 1,017 பொதுவிநியோகத் திட்ட அங்காடிகள் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 4.63 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள கோட்டூர் தலைமையிடம் தாய் அங்காடியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள ந.புதூர் முழுநேர அங்காடியானது 519 குடும்ப அட்டைகளுடன் முழு நேரம் இயங்கும் வகையில் ந.புதூர் கிராம மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இப்பகுதி கிராம மக்களின் நேரமும், அலைச்ச லும் குறையும். எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கான உணவுப் பொருட்களை தங்களது கிராமத் திலேயே பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், அறந்தாங்கி சரக துணைப்பதிவாளர் ஆறுமுக பெருமாள், துணை பதிவாளர் (பொ.வி.தி) கோபால், லெம்பலக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் பாலு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.