அறந்தாங்கி அருகே ஏழை விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்
அறந்தாங்கி அருகே ஏழை விவசாயிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் டிராக்டர் வழங்கினார்.
திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அமைப்பின் மூலம் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லனேந்தல் கிராமத்தில் ஒரு பெண் விவசாயிக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பயனாளியை சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷா தேர்வு செய்தார்.
பயனாளிக்கு ராகவா லாரன்ஸ் டிராக்டர் வழங்கினார். அதேபோல் ஹேப்பி வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனலில் வெளியான செய்தி மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஆலங்குடியை சேர்ந்த சிறுமி பவானிக்கு மருத்துவ செலவுக்கான தொகை 7 லட்சத்தை ஏற்றுக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது:- மாற்றம் வர வேண்டும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்து சேவை செய்கிறார்கள். நான் கடவுளுக்கு செய்யும் சேவையாக இதை கருதுகிறேன். எனது தாயார் அரசியலே வேண்டாம் என்றார். அதுபோல அரசியல் வேண்டாம் என்பது எனது கொள்கை. அன்பு தான் எனக்கு முக்கியம்.
10 மாவட்ட விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்க உள்ளேன் 500 பேருக்கு தையல் மிஷின் வழங்குவதே அடுத்த திட்டம். பணம் மட்டும் உதவியல்ல. சேவை செய்வதும் உதவிதான். இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பற்றி யூடியூப் சேனல் செய்தி மூலம் அறிந்து கொண்டு உதவி செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா கூறுகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் 10 மாவட்ட விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்க உள்ளார் ஐந்து மாவட்டத்திற்கு வழங்கி விட்டார் ஏழைகளுக்கு எம்.ஜி.ஆர் உணவளித்தார் ஆனால் ராகவா லாரன்ஸ் உணவு தயாரிக்க பயன்படும் டாக்டரை வழங்குகிறார் என்றார்.