வேர்களைத் தேடி: புதுக்கோட்டைக்கு வந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள்

வேர்களைத் தேடி எனும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா குழுவினர் வருகை புரிந்தனர்

Update: 2023-12-31 17:00 GMT

வேர்களைத் தேடி எனும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா குழுவினருடன் கலந்துரையாடிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 'வேர்களைத் தேடி” என்னும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தமிழக பண்பாட்டினை அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா குழுவினர்கள் வருகை புரிந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலாதளத்திற்கு, தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை சார்பில், 'வேர்களைத் தேடி” என்னும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தமிழக பண்பாட்டினை அறிந்து கொள்ளும் வகையில் வருகை புரிந்த சுற்றுலா குழுவினர்களை, மாவட்ட ஆட்சித் தலைவர்.மெர்சி ரம்யா இன்று (31.12.2023) வரவேற்று கலந்துரையாடினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் ‘வேர்களைத் தேடி" திட்டத்தின் மூலம் அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது.

அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு 'அயலகத் தமிழர் தினம்" எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் கொண்டாடி வருகிறது.

அயலகத் தமிழர்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாக, பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்த்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக ‘வேர்களைத் தேடி" என்றொரு பண்பாட்டு பயணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் குழந்தைகள், இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்கள்.

அதனடிப்படையில் ‘வேர்களைத் தேடி" திட்டத்தின் முதல் பண்பாட்டு பயணத்தை டிசம்பர் 27-ஆம் தேதி மகாபலிபுரத்தில் இருந்து, மாண்புமிகு தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்; அவர்கள் துவக்கி வைத்தார். இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பீஜி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் வந்துள்ளனர்.

இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள். இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை பெறுவார்கள்.

3 -வது ஆண்டாக அயலகத்தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். மேலும் இவர்கள் தங்கள் நாடுகளுக்கு சென்று தமிழர்களின் கலாசார தூதுவர்களாகவும் செயல்படுவார்கள்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில், பழக்காலத்தில் சமண துறவிகள் மேற்கொண்ட வாழ்வியல் குறித்தும், சித்தன்னவாசலில் உள்ள மூலிகை ஓவியங்கள் குறித்தும், சுற்றுலா குழுவினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலையின் சிறப்புகள் குறித்தும், திருமயம் கோட்டையின் சிறப்புகள் குறித்தும், ஏனைய சுற்றுலா தளங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகள், கட்டிட கலையின் பெருமைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மாநில அரசின் மூலம் தமிழகத்தின் பண்பாட்டினை அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘வேர்களைத் தேடி" என்ற பயணத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் அவர்களின் பண்பாடுகளை உலகரிய செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் .வி.ராமசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பி.முத்துச்சாமி, இலுப்பூர் வட்டாட்சியர் சூரியபிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், பிரேமாவதி, ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னுசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News