ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு 'login' செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை சேவையில் புதிய பயனர் கணக்கு உருவாக்குவது பற்றிய வழிமுறை விளக்கங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.;
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை சொத்து பரிவர்த்தனை ஆவணங்கள் பதிவு செய்வதால், சொத்தின் உரிமையாளர்களுக்கு அவை ஆதார ஆவணங்களாக அமைகின்றன. நிலம் மற்றும் சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் சொத்துக்களின் மீது உரிமையாளருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன் நில அபகரிப்பு முறைகேடுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கப் பெறும். சொத்து தொடர்பாக ஆவணங்கள் பதிவு செய்வதுடன் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண நிகழ்வுகள் மற்றும் சீட்டு, சங்கம் ஆகியவற்றினை பதிவு செய்வதில் இத்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளின் தன்மையால், இத்துறை, மக்களுடன் அதிகத் தொடர்பு கொண்டு உள்ளது. மாநிலம் முழுவதும் 9 துணைப்பதிவு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு துணை மண்டலமும் ஒரு துணைப் பதிவுத் துறைத் தலைவரின் கீழ் செயல்படுகின்றது. மாநிலம் முழுவதும் 50 பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் 575 சார்பதிவாளர் நிறுவப்பட்டுள்ளன.
தற்போது பத்திரப்பதிவுக்கு மக்கள் தாலுகா அலுவலகத்திற்கும், சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் பொதுமக்கள் அலைவதை தடுக்க ஆன்லைன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் முடியாத நிலையில் பொதுமக்கள் இன்னமும் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பதிவுத்துறை சேவையில் ஆன்லபுதிய பயனர் கணக்கு உருவாக்குவது பற்றிய வழிமுறை விளக்கங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
புதிய பயனாளர் கணக்கை உருவாக்க https://tnreginet.gov.in/ என்ற பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் ‘பதிவு செய்தல்’ என்ற வழிமுறைக்கு சென்று ‘பயனர் பதிவு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
முகப்பு பக்கம் >பதிவு செய்தல் > பயனர் பதிவு
இதில் தோன்றும் "உங்கள் கணக்கினை உருவாக்குக" பக்கத்தில் உள்நுழைவு விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள், பயனர் வகைப்பாடு என மூன்று பிரிவுகளுக்கான விபரங்களை அளிக்க வேண்டும்.
அனைத்து விபரங்களையும் முழுமையாக உள்ளீடு செய்த பின் " OTP-யினை பெறுக " என்பதை கிளிக் செய்து, நீங்கள் உள்ளீடு செய்த உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வரும். OTP-யை சரியாக உள்ளிட்டு, பின்னர் " பதிவினை முடிக்க " பொத்தானை கிளிக் செய்து புதிய கணக்கு உருவாக்குதலை முடிக்கவும்.
இதனையடுத்து நீங்கள் உள்ளீடு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு "Activation Link" அனுப்பபட்டிருக்கும். அந்த லிங்க்கை கிளிக் செய்து உங்களது புதிய பயனாளர் பதிவை ஆக்டிவேட் செய்யவும்.
இதனைத்தொடர்ந்து, பதிவுத்துறை பக்கத்தில் உங்களது பயனாளர் பெயர் (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) -யை உள்ளீடு செய்யவும்.
பின்னர் திறக்கப்பட்ட உங்களது பயனாளர் பக்கத்தில் தமிழ்நாடு அரசு பதிவுத்துறையின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்தலாம்.