பாலில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் நாசர் எச்சரிக்கை!

பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் எச்சரித்துள்ளார்.

Update: 2021-06-06 09:46 GMT
புதுக்கோட்டை ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள ஆவின் விற்பனை நிலையம் மற்றும் புதுக்கோட்டை ஆவின் பால் உற்பத்தி செய்யும் நிலையத்தை இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு செய்தார். மேலும், ஆவின் பால் தயாரிக்கும் பல்வேறு இடங்களையும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆவடி நாசர், ஆவின் பால் தாய்ப்பாலுக்கு இணையானது. பொதுமக்களும் ஆவின் பாலை வாங்கி அருந்த வேண்டும். அதேபோல் தனியார் பால் நிறுவனங்கள் கலப்படத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவின் பால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற அதிமுக ஆட்சியில் ஆவின் பால் நிறுவனத்தில் பல்வேறு கட்ட ஊழல்கள் நடந்துள்ளது. தற்போது அந்த ஊழல் குறித்து நடவடிக்கை கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.

ஆவின் பால் விற்பனையை மாநில மட்டுமல்லாமல் பல்வேறு அண்டை நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்புவதற்கு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஆவின் பால் விற்பனையும் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சியைவிட தற்போது நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அவருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகர செயலாளர் நைனா முகமது மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News