ஆலங்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணி: அமைச்சர்தொடக்கம்
இக்கல்லூரியானது ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் மொத்தம் சுமார் 50,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது
ஆலங்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில், ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (05.03.2023) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த பின்னர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கும் கல்வி, சுகாதாரம், உணவு, உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக மிகவும் பின்தங்கிய பகுதியான ஆலங்குடி சட்;டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சரால் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிக்கப்பட்டு, அக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் கீழாத்தூர் சமத்துவபுரம் அருகில் தற்போது அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இக்கல்லூரியானது ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம்தளம் கொண்டதாக, ஒவ்வொரு தளமும் 16,700 சதுரஅடி பரப்பளவில் மொத்தமாக சுமார் 50,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டடத்தில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கருத்தரங்குக் கூடம், கணினிக் கூடம், நூலகக் கூடம், சுகாதார மையம், துறைத் தலைவர் அறை, முதல்வர் அறை, அலுவலக அறை, ஆவண பாதுகாப்பு அறை, உடல் இயக்குனர் அறை, ஆசிரியர் அறை மற்றும் மாணவர் கூட்டுறவு அங்காடி என அனைத்து வசதிகளுடன் சிறப்புற அமைக்கப்பட உள்ளது. இக்கட்டடப் பணியானது விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மூலமாக தமிழகத்தில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயர;கல்வி கிடைக்கபெற்று, இந்திய அளவில் தமிழகம் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் 51 சதவீதம் பெற்று முதல் நிலையில் உள்ளது. இதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சரால் கிராமப் புறங்களில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேரந்த அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப் பெண்” திட்டத்தினை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மூலம் தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாடு உலகறிய செய்யும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
மேலும் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு அவற்றின் மீதும் துறைச் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்துகொண்டு, அவற்றின் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
முன்னதாக, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், சிட்டங்காடு முதல் தொழுவங்காடு வரை ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் 3 கி.மீட்டர் நீளத்திற்கு புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைப் பணி, மறமடக்கி ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளினை முன்னிட்டு தனியார் அமைப்பின் மூலம் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான கல்லுக்குளம் தூர்வாரும் பணி, செட்டிக்காடு வடக்கில் மஞ்சு விரட்டுப் போட்டியினையும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி இயக்ககம்) குணசேகரன், கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) திரு.வேல்ராஜ், உதவி செயற்பொறியாளர் (பொ.ப.து.) ராமச்சந்திரன், உதவிப் பொறியாளர் (பொ.ப.து.) கார்த்திக்கேயன், கல்லூரி முதல்வர் சேதுராமன், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், செந்தில்நாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாராணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.