திருவரங்குளம் அறந்தாங்கி ஒன்றியங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச் சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி ஒன்றியங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மா.செல்வி தலைமையில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (07.03.2023) துவக்கி வைத்தார்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை துவக்கி வைத்து, அதனைத் தொடர்ந்து வல்லத்திராக்கோட்டையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி, ரூ.5 இலட்சம் உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார்.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சி, கரம்பகாடு கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை, ரூ.36.51 இலட்சம் மதிப்பீட்டில் சிட்டங்காடு ஊராட்சி மற்றும் ரூ.49.71 இலட்சம் மதிப்பீட்டில் நாகுடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணி, பச்சலூரில் தமிழ்நாடு முதலமைச்சரி பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் விழா உள்ளிட்டவைகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப் புறங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டம் மீண்டும் புதுப் பொழிவுடன் முதலமைச்சரால் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் முதற்கட்டமாக ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, மின் விளக்கு உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீதமுள்ள ஊராட்சிகளில் வருகிற நிதியாண்டில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு செயல் படுத்தி வருகிறது.
எனவே கிராமப் புறங்களில் செயல்படுத்தப்படும்; இது போன்ற மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்கள் முறையாக பெற்று பயன்படுத்தி, தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார் சுற்றுச் சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
பின்னர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சி, வடக்கிப்பட்டி மற்றும் நெடுவாசல் கிழக்கு ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலைக் கடைகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வட்டாட்சியர்கள் செந்தில்நாயகி, பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.