புதுச்சத்திரம் ஏடிஎம் கொள்ளையில் இருவர் கைது: ரூ.1.58 லட்சம் பறிமுதல்.

Puthusathiram-புதுச்சத்திரம் ஏடிஎம் கொள்ளையில் சேலத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து, ரூ.1.58 லட்சத்தை கைப்பற்றினர்.

Update: 2022-05-19 13:00 GMT

Puthusathiram

Puthusathiram-புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த சேலத்தைச் சேர்ந்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1.58 லட்சம் ரொக்கம் மற்றும் கேஸ் கட்டிங் மெசின் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் அருகே புதுச்சத்திரம், பெருமாள்கோயில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். அங்கு அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி நள்ளிரவில் அந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் கட்டிங் மெசின் மூலம் இயந்திரத்தை உடைத்து உள்ளிருந்து ரூ. 4 லட்சத்து 90 ஆயிரத்து 500 பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், தடயங்களை அழிக்க இயந்திரம் முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவிச்சென்று விட்டனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 15 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் - சேலம் ரோட்டில், ஏ.கே.சமுத்திரத்தில் தனிப்படை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் புரஜாபாத் (32), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது இம்ரான் (28) ஆகியோர் இருந்தனர். இருவரும் தற்போது சேலம் அஸ்தம்பட்டியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து, புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதையொட்டி, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 1.58 லட்சம் ரொக்கம் மற்றும் கேஸ் கட்டிங் இயந்திரம், கேஸ் சிலிண்டர், கடப்பாரை, கோடாரி மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்.பி., சரண் தேஜஸ்வி கூறுகையில், சேலத்தில் வசிக்கும் சுரேஷ் புரஜாபாத் அங்கு டீ கடை வைத்து நடத்தி வருகிறார். பீகாரைச் சேர்ந்த முகம்மது இம்ரான் ஃபேஷன் டிசைனிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சுரேஷ் டீ கடைக்கு முகம்மது இம்ரான் வந்து செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாததால் இருவரும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி புதுச்சத்திரம் தனியார் வங்கி ஏடிஎம்யை குறிவைத்து அங்குள்ள சிசிடிவி கேமிரா, அலாரம் உள்ளிட்டவற்றின் இணைப்புகளை துண்டித்து, மெசினை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதற்கு முன் இருவரும் கூட்டு சேர்ந்து மற்றொரு இடத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்து அது தோல்வியில் முடிந்துள்ளது. எனினும், இவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவாகவில்லை. இம்முறை கொள்ளைத்து போலீசாரிடம் சிக்கியுள்ளனர் என்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News