பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

Update: 2023-01-15 08:45 GMT

பொங்கல் பண்டிகை மற்றும் தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலபிசேகம் நடைபெற்றது.

இன்று பொங்கல் பண்டிகை மற்றும் தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான சாலகிராம மலையின் மேற்குப்பகுதியில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக எதிரில், ஸ்ரீ நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் கோயிலில் உள்ள ஸ்ரீ நரசிம்மரையும், சாலகிராம மலைøயையும் வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தினசரி சுவாமிக்கு 1,008 வடை மலை அபிசேகம், சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும், தொடர்ந்து வெள்ளிக்கவசம் மற்றும் தங்கக்கவசம் சார்த்தப்பட்டு தீபாராதணை நடைபெறும். மாலையில் தங்கத்தேர் உற்சவம் மற்றும் சந்தனக்காப்பு, வெண்ணைக்காப்பு, மலர் அங்கி, முத்தங்கி போன்ற அலங்காரம் நடைபெறும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு பக்தர்கள் மூலம் சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும். இன்று தைப்பொங்கல் பண்டிகை மற்றும் தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1,008 வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

இதனையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கட்டளைதாரரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், நாமக்கல் கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Tags:    

Similar News