தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

Update: 2024-05-10 02:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் குறித்து நடைபெற்ற, ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் பேசினார். அருகில் ஆட்சியர் உமா.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக்கல்வித்துறை செயலாளருமான குமரகுருபரன், நாமக்கல் வருகை தந்து பல்வேறு திட்டப்பணிகளின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்தார். மேலும், மாவட்டத்தில் குடிநீர் தேவைக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமாக உள்ள அடிப்படை கட்டமைப்புகள், நீர் ஆதாரங்கள், அதன் மூலம் வழங்கப்படும் நீரின் அளவு, குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நீரின் அளவு குறித்தும், குடிநீரை வீடுகளுக்கு விநியோகிக்க உள்ள கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அவற்றின் கொள்ளளவு ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் அரசு பயணியர் மாளிகையில், மாவட்டத்தில் கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குதல் குறித்து, தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது;

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் 322 கிராம பஞ்சாயத்துக்களிலும், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க அனைத்து அலுவலர்களும் முழுமையாக பணியாற்ற வேண்டும். தற்போது செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களின் மூலம் கிடைக்கும் குடிநீரை தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சீராக விநியோகிக்க வேண்டும். குடிநீர் குழாய்கள் பழுதுபட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். பொதுமக்களின் குறைகள் மீது நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளில் அலுவலர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து ஊரகப்பகுதிகள், டவுன் பஞ்சாயத்து பகுதிகள், நகராட்சி பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூடுதலாக குடிநீர் வழங்கவும், புதிய போர்வெல் கிணறுகள் அமைத்தல், திறந்த வெளி கிணறுகள் தூர்வாருதல், பழைய போர்வெல்களை தூர்வாருதல், பைப் லைன் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News